

சென்னை: மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என சித்தரிக்க திமுக முயற்சி செய்கிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக மக்களவை உறுப்பினர் வில்சன், கிறிஸ்தவர்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியுதவியை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக எம்.பி. வில்சன், தமிழகத்தின் நலனுக்காக எந்த கடிதமும் எழுதவில்லை. மதத்தைப் பரப்ப வரும் வெளிநாட்டு உதவியை அனுமதிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். வெளிநாட்டில் இருந்து பெறப்படும் நிதிக்கு உரிய கணக்கு காட்டாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்று தெரிந்தும், திமுக எம்.பி. வில்சன் இவ்வாறு கடிதம் எழுதுகிறார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட அமெரிக்க அறக்கட்டளை தந்த ரூ.13 கோடியை தென்னிந்திய திருச்சபை சுருட்டியது. இது தொடர்பான வழக்கு சென்னைஉயர் நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கிறது. அரசின் உபயோகத்துக்காக கோயில் நிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு, கிறிஸ்தவர்களிடம் இருந்து எத்தனை இடங்களை கையகப்படுத்தியுள்ளது?
வில்சனின் விசுவாசம் கிறிஸ்தவர்களிடம் மேலோங்க இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தேர்தல் நெருங்கும் நேரம் மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என சித்தரிக்கும் முயற்சி. இரண்டாவது திமுகவுக்கு தேர்தலில் செலவு செய்ய, வாக்குக்கு பணம் கொடுக்க, திமுக வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள நிதியை கிறிஸ்தவ நிறுவனங்கள் மூலம் சேவை நிதி என்ற பெயரில் தமிழகத்துக்குள் கொண்டு வருவதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.