

சென்னை: முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தேசிய எஸ்சி ஆணையம் மற்றும் புகார்தாரரான பாஜக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதுவரை முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம், பஞ்சமி நிலம் எனக் கூறி தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு புகார்அளித்தார்.
அதற்கு பதிலளிக்கும்படி ஆணையமும் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘‘விதிகளின்படி புதிதாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையத்துக்கு உத்தரவிட்டு, முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை சார்பில்உயர் நீதிமன்றத்தி்ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குதலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
உரிமையியல் நீதிமன்றமல்ல: அப்போது முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘இந்த நிலத்தின் உரிமை அல்லது அதன் தன்மையை தீர்மானிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் அந்த நிலம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் என வருவாய் துறை ஆவணங்களின் அடிப்படையில் மாநில அரசு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த நிலத்தின் உரிமை யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க ஆணையம் ஒன்றும் உரிமையியல் நீதிமன்றம் அல்ல, என வாதிட்டார்.
அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இதுதொடர்பாக பதிலளிக்கப்படும் என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கு தொடர்பாக தேசிய எஸ்சிஆணையம் மற்றும் புகார்தாரரான பாஜக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
அதுவரை முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக தேசிய எஸ்சி ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் வாய்மொழியாக அறிவுறுத்தினர். இதுதொடர்பாக ஆணையத்துக்கு கடிதம் எழுதுவதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.