Published : 13 Feb 2024 06:18 AM
Last Updated : 13 Feb 2024 06:18 AM
விழுப்புரம்: மின்வாரியத்தின் அலட்சியத்தால், தனது இரு கால்களை இழந்த இளைஞர் விழுப்புரம் ஆட்சியரை சந்தித்து தனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
விழுப்புரம் அருகே சோழம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பூபாலன் (18). இவர், கடந்த டிசம்பர் மாதம் 17-ம்தேதி காலை அதே ஊரில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மொட்டை மாடியில் விழுந்தது.
இருண்டு விட்டதால் மறுநாள் (டிச.18) காலை பூபாலன் பள்ளியின் மொட்டைமாடிக்கு சென்றார். முன் இரவில் பெய்த மழைநீர் மொட்டை மாடியில் தேங்கி நின்றதால் வெற்றுக்காலுடன் சென்று பந்தை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது, தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின் கம்பி பூபாலன் தலையில் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கினார். சுமார்2 மணி நேரத்துக்கு பிறகு எழுந்தபோது அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கால்கள் மரத்து போனது போலாகி விட்டது.
அதன்பின் அவர் கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது இரு கால்களும் முழங்காலுக்கு கீழே அகற்றப்பட்டன.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியையொட்டி தாழ்வாக சென்ற 22 கிலோ வோல்ட் உயரழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர் 24.6.2022மற்றும் 21.12.2022-ல் மின்வாரியத்துக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து 23.01.2023 அன்று 22 கிலோ வோல்ட் உயரழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் 11 மாதங்கள் வரைஇக்கம் பியை மாற்றி அமைக்காததால் இந்த விபத்து ஏற்பட்டது.
மின்வாரியத்தின் அலட்சியத்தால் இந்த இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, நமது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் சோழம்பூண்டியில் உள்ள பூபாலன் இல்லத்துக்கு விழுப்புரம் மின்வாரிய (விநியோகம்) செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையில் உதவிசெயற்பொறியாளர் அண்ணாதுரை, பூத்தமேடு இளநிலை மின்பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் சென்று மின்வாரியம் சார்பில் இழப்பீடு தருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே கால்கள் அகற்றப் பட்ட பூபாலன் தன் பெற்றோருடன் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலு வலத்துக்கு வந்து, ஆட்சியர் பழனி யிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இரு கால்களும் அகற்றப்பட்டிருந்த நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை வீல் சேரில் வைத்து அழைத்து வந்திருந்தனர். உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதால் அவரது தலையில் முடிகள் பொசுங்கி, அந்த இடத்தில் தழும்புகள் உருவாகியிருந்ததை காண முடிந்தது. ஆட்சியரிடம் அவர்அளித்திருந்த மனுவில், “இச்சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இரு கால்களும் எனக்கு அகற்றப்பட்டிருக்கின்றன.
எனக்கு அரசு வேலைக்கு பரிந்துரைப்பதோடு, இழப்பீட்டுத் தொகை தர ஆவண செய்ய வேண்டும். மேலும் செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
நான் பயன்படுத்தும் வகையில், என் வீட்டில் கழிப்பறை அமைத்து தர வேண்டும். மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டியும் தர வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT