Published : 19 Aug 2014 02:47 PM
Last Updated : 19 Aug 2014 02:47 PM

இந்தியாவை இந்து நாடு என்று ஆர்எஸ்எஸ் கூறுவது தவறு: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கருத்து

இந்தியாவை இந்து நாடு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறுவது தவறு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாள் விழா, சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள், மூப்பனார் மற்றும் சத்தியமூர்த்தி உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கை ராணுவத்தினர் பிடித்துச் சென்ற மீனவர்களை விடுவிக்க, நான் நேரடியாகவே தலையிட்டு மீனவர்களையும், படகுகளையும் மீட்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால், இப்போது 94 மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

தற்போது, இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்கின்றனர். ஆனால், ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை கஞ்சா கடத்தியதாக இலங்கை அரசு, கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. அவர்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று, காவல்துறையிடம் அறிக்கை பெற்று, அப்போதைய வெளியுறவு அமைச்சர், இலங்கை அரசிடம் கொடுத்ததை அறிவேன். எனவே, அவர்களையும் விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினை தீர, அந்நாட்டுடன் நல்லுறவு தேவைதான். ஆனால், சுப்பிரமணியன் சுவாமி எந்த அடிப்படையில் இலங்கைக்கு செல்கிறார் என்பதை, மத்திய அரசுதான் விளக்க வேண்டும்.

இந்தியாவை இந்து நாடு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியது தவறு. இது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்பது உண்மை. ஆனால், நமது அரசியல் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்றுதான் கூறுகிறது. எனவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுவது, ஆளும் கட்சியின் கொள்கையா என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். பாகிஸ்தானுடன் திட்டமிட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது அவசர முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், முன்னாள் எம்.பி. ராணி, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x