Published : 07 Feb 2018 09:02 AM
Last Updated : 07 Feb 2018 09:02 AM

தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணமா?: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய பாதுகாப்பு படையினர் நேற்று ஆய்வு செய்தனர். கோயிலில் நடந்த பயங்கரத் தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

சமீப காலமாக உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, பல்வேறு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் போன்ற அச்சுறுத்தல்களால் 6 மாதத்துக்கு ஒருமுறை டெல்லி, பெங்களூரு தேசிய பாதுகாப்புப் படையினர் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு செய்து விவரம் சேகரிப்பது வழக்கம்.

இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி இரவு கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஐ) எஸ்பி ராஜேஷ்குமார் பாண்டே, கவுதம் சாப்பல் ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று மீனாட்சி அம்மன் கோயிலில் சுமார் 3 மணி நேரம் ஆய்வு நடத்தினர். அப்போது, கோயில் இணை ஆணையர் நடராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.

தீ விபத்துக்கு வேறு ஏதேனும் சதித்திட்டம் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தேசிய பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்வது வழக்கமானது என்றாலும், தீ விபத்துக்குப் பிறகு நடைபெறும் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இன்றும் (பிப்.7) ஆய்வு நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த ஆய்வின் அறிக்கை, தேசிய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் என ஆய்வுக் குழுவினர் கூறினர்.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், தாரணி ஆகியோர், ‘அனைத்து கோயில்களிலும் தீத்தடுப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இது பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். மீனாட்சி அம்மன் கோயிலில் தீயணைப்பு கருவிகள் இல்லாதது வேதனையானது’ என்றனர்.

மேலும், தமிழக கோயில்களில் செய்யப்பட்டுள்ள தீத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்.27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x