கால்நடை, வளர்ப்பு பிராணி வளர்க்க உரிமம் பெற வேண்டும்: மதுரை மாநகராட்சி உத்தரவு
மதுரை: மதுரை மாநகராட்சியில் மாடு, நாய், பன்றி, குதிரை போன்றவை வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி, உரிமம் பெறுவதோடு சாலைகளில் அவற்றை சுற்றத்திரிய விட்டால் ரூ.2,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கால்நடைகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவது அதிகரித்துள்ளது. சாலைகளின் குறுக்கே அவை திடீரென்று புகுந்து விடுவதால் தடுமாறும் வாகன ஓட்டிகள், மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். சென்டர் மீடியம் இடைவெளியில் திடீரென்று புகும் மாடுகள், நாய்கள், பன்றிகளால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து உயிர் பலியும், மீண்டும் முன்போல் இயங்க முடியாத அளவிற்கு கை, கால்களும் முடங்கும் பரிதாபங்களும் நடக்கிறது.
அதனால், மாநகராட்சி நிர்வாகம், கால்நடைகளை பிடித்து குறைந்தளவு தொகை அபராதம் விதித்துப் பார்த்தனர். அப்படியிருந்தும், கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரியும் போக்கும் குறையவில்லை. அதனால், தற்போது அபராத தொகையை உயர்த்தியும், தொடர்ந்து சுற்றித்திரிய விட்டால் பொது ஏலம்விடவும், இனி வீடுகளில் கால்நடைகளை வளர்க்க வேண்டுமென்றால், மாநகராட்சியில் முறைப்படி உரிமைத் தொகை செலுத்தி அனுமதி பெற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: "கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, மாடு, குதிரை, பன்றி போன்றவை சாலைகளில் சுற்றித்திரிந்தால் ஸ்பாட் பைன் அபராதம் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும். கன்று, கழுதை என்றால் ஸ்பாட் பை் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் அதுவே உரிமையாளர் யார் என்று தெரியாமல் முதல் முறையாக சுற்றித்திரிந்து பிடிப்படும் மாடு, குதிரை, பன்றிகள் மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்து, மாநகராட்சி காப்பகத்தில் பராமரிக்கப்பட்டால் அதற்கு முன் அபராதம் முன்பு ரூ.1,500 இருந்தது.
தற்போது அந்த அபராதம் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் முறை சாலைகளில் மாடு, குதிரை சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் முறை கன்று, கழுதையை அவிழ்த்துவிட்டால் அதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டு முறைக்கு மேல் சாலைகளில் சுற்றித்திரித்து 5 நாட்களுக்கு உரிமையாளர்களால் உரிமைக் கோரப்படாத மாடு, குதிரை, பன்றிகளுக்கு அபராதத் தொகை ரூ.20 ஆயிரம் விதிக்கப்பட்டு, மாநகராட்சி ஆணையாளரால் பொது ஏலம் விடப்படும்.
இரண்டு முறைக்கு மேல் அல்லது 5 நாட்களுக்கு உரிமை கோரப்படாத கன்று, கழுதைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு மாநகராட்சி ஆணையாளரால் பொது ஏலம் விடப்படும். பிடிக்கப்படும் கால்நடைகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்தில் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு பராமரிப்பு தொகையான நாள் ஒன்றிற்கு ரூ.300 வசூல் செய்யப்படும். பிடிக்கப்படும் கால்நடைகள், மாநகர விலங்கியல் நல அலுவலர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும். கால்நடைகளுகு்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் முறையாக வழங்கப்படும்.
கால்நடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை நகல் மற்றும் உறுமொழி (ரூ.10) பத்திரம் வழங்கி கால்நடைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி ஊழியர்கள், கால்நடைகளை பிடிக்கும் போது கால்நடை உரிமையாளர்கள் அல்லது பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தி பணி செய்ய விடாமல் தடுத்தால் மாநகராட்சி நகர் நல அலுவலரால் போலீஸில் புகார் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளை வளர்க்க உரிமையாளர்கள் ஆண்டுதோறும் மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும்.
மாடுகளுக்கு ரூ.100, கன்று ரூ.50, குதிரை ரூ.150, கழுதை ரூ.150, நாய்கள் ரூ.100, பன்றி ரூ.100 உரிமம் தொகை செலுத்தி அதனை வளர்க்கலாம். உரிமம் பெறாத கால்நடைகளை வளர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளை வளர்க்க குடியிருப்பு பகுதிகளில் தொழுவம் அமைக்கக் கூடாது. பொது இடங்களில் வைத்து பராமரிக்கக் கூடாது. கால்நடைகள் வெளியேற்றும் திடக் கிழவுகளை சொந்த வாகனம் அமைத்து அப்புறப் படுத்த வேண்டும், சாலைகளில் மட்டுமில்லாது தெருக்களில் அவிழ்த்துவிடப்படும் மாடு, குதிரை, பன்றி, கன்று, கழுதைகளுக்கு அபராதம் உண்டு. அவை ரூ.1,500 முல் ரூ,5 ஆயிரம் விதிக்கப்படும்" என்றனர்.
