பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபியின் தண்டனையை உறுதி செய்த விழுப்புரம் நீதிமன்றம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.20,500 அபராதமும், புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இருவரும் தனித் தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த பிப். 1-ம் தேதி முதல் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிமன்றம் அளித்த 5 நாட்கள் கால அவகாசத்தின் படி பிப். 7-ம் தேதி தனது வாதத்தை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று அரசு தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து அரசு தரப்பு வாதம் தொடங்கியது.

அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அளித்த வாதத்துக்கு பதிலளிக்கும் விதமாக அரசு தரப்பு வாதத்தை முன்வைத்து நிறைவு செய்தார். இதையடுத்து பிப். 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (பிப்.12) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவதாக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு கீழமை நீதிமன்றமான தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதி பூர்ணிமா தெரிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதே போல் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து கீழமை நீதிமன்ற வழங்கிய தீர்ப்பையும் உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தீர்ப்பளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in