Published : 12 Feb 2024 05:24 AM
Last Updated : 12 Feb 2024 05:24 AM

கார் சிலிண்டர் வெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள் சேர்த்த வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்தது என்ஐஏ

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவழக்கில் மேலும் 4 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து தீவிரவாத தொடர்புடைய மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் 2022 அக்.23-ல் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது. மேலும், கோவையில் உள்ள தனியார் அரபிக் கல்லூரியிலும் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். அக்கல்லூரியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச் சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், சென்னை பிரிவு என்ஐஏ அதிகாரிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக கோவை, சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பல்வேறு பயங்கரவாத செயல்கள் உள்பட பல்வேறு சட்ட விரோத மற்றும் தேச விரோத செயல்கள் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் என்ஐஏ தமிழகம் முழுவதும் 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக ஜமீல் பாஷா உமரி, மவுலவி ஹுசைன் ஃபைசி, இர்ஷாத், சையத் அப்துர் ரஹ்மான் உமரி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். மேலும், சோதனையின்போது ஏராளமான மின்னணு சாதனங்கள், பொருட்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். 6 லேப்டாப், 25 செல்போன்கள், 34 சிம் கார்டுகள், 6 எஸ்.டி (மெமரி) கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவை இதில் அடங்கும்.

மதராஸ் அரபிக் கல்லூரி, கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடைய 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அரபு மொழி வகுப்புகளின் வேடத்தில், தீவிரவாதிகளின் கொள்கைகளைப் பிரசங்கம் செய்வதன் மூலமும் வன்முறை ஜிஹாதை ஊக்குவிப்பதன் மூலமும் ஏமாறக்கூடிய இளைஞர்களை ரகசியமாக தீவிரவாதிகளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சமூக ஊடக தளங்கள், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் செல்போன் மூலமும் தீவிரமயமாக்கல் ஆன்லைனில் நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் செயல்பாட்டாளர்கள் வகுப்புகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர்.

2022 அக்டோபரில் நடந்த கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 10 குற்றவாளிகள் கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், 2019-ல் இலங்கை கொழும்பில் 250-க்கும் மேற்பட்ட பொது மக்களை கொன்ற நபரை தற்போது விசாரணை வளையத்தில் உள்ளவர்கள் புகழ்ந்துள்ளனர்.

மேலும், ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்கும், வளர்ப்பதற்கும் சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்தி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் சென்னை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள். மேலும், பயங்கரவாத தொடர்பு குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x