Published : 12 Feb 2024 05:31 AM
Last Updated : 12 Feb 2024 05:31 AM
ராமேசுவரம்: தமிழக மீனவர்களைத் துன்புறுத்தும் இலங்கைக்கு பிரதமர் மோடி உதவி செய்கிறார். ஆனால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழகமக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். மீனவரணிச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், எம்எல்ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி) முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் ஒருவர்கூட இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று நரேந்திர மோடிவாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 3,076 தமிழக மீனவர்கள் இலங்கைகடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய நாடாளுமன்றக் கூட்ட தொடரில் மீனவர்கள் கைதுதொடர்பாக விவாதிக்க திமுக சார்பில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்றபோது, அதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது.
இலங்கையில் பொருளாதார நிலை மோசமடைந்தபோது, மத்தியஅரசு ரூ.34 ஆயிரம் கோடி வழங்கியது.
தமிழக மீனவர்களைக் கைதுசெய்து துன்புறுத்தும் இலங்கைக்கு பிரதமர் மோடி உதவி செய்கிறார். ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. வரும் மே மாதத்தில் புதிய ஆட்சி அமைந்தவுடன், ஜூன் மாதத்திலிருந்து தமிழக மீனவர்கள் பாதுகாப்புடன் கடலுக்குச் சென்று வருவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மீனவர்கள், திமுக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 62 பேரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT