Published : 12 Feb 2024 05:46 AM
Last Updated : 12 Feb 2024 05:46 AM

செல்போன் செயலியில் முதலீடு செய்ய புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு

கோவை: கோவையில் செல்போன் செயலிமுதலீடு விவகாரத்தில் அதன் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய வாடிக்கையாளர்கள் இணைய முடியாத வகையில் திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் செயலியைப் பதிவு செய்து, அதில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் தினமும் ரூ.1,000 வரை (முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப) வருவாய் ஈட்டலாம் என அறிவிக்கப்பட்டது.

இதை நம்பிய ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் திரட்டியது தெரியவந்தது.

இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து விதிகளை மீறி முதலீடுதிரட்டியது தொடர்பாக, தனியார் நிறுவன இயக்குநர் சக்தி ஆனந்தன்மீது மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, செயலியில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர், அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்த பலர் கோவை மாநகர காவல் ஆணையரகத்துக்கு வந்து நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சக்தி ஆனந்தன் உள்ளிட்ட 180 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சக்தி ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், முதலீட்டாளர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகேபோராட்டம் நடத்தப் போவதாகத் தகவல் பரவியதால், அங்கு நேற்று போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, தனியார் நிறுவனத்தின் செயலி முடங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், புதிய வாடிக்கையாளர்கள் இணைய முடியாத வகையில்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும்,ஏற்கெனவே முதலீடு செய்தவர்களுக்கு தொடர்ந்து வருவாய் கிடைக்குமா என்ற கேள்வியும் முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x