

சமையல் எரிவாயு கசிவால் ஏற்படும் விபத்தை தடுக்க அடிக்கடி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று பேரவையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 55-ன் கீழ் தேமுதிக உறுப்பினர்கள் பாபு முருகவேல், தினகரன் ஆகியோர் சமையல் எரிவாயு கசிவால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு விளக்கம் அளித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
இரவு நேரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் ரெகுலேட்டரை மூடாமல் விடுவது, எரிவாயு இணைப்புக் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை சரிவர கவனிக்காமல் விட்டுவிடுவது, எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கவனிக்காமல் மின்சாரத்தைப் பயன்படுத்துவது, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களில் இருந்து, வர்த்தக ரீதியான எரிவாயு சிலிண்டருக்கு சட்டத்துக்கு புறம்பாக எரிவாயுவை மாற்றுவது, தரச்சான்று வழங்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற கவனக் குறைவான செயல்களால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, நுகர்வோர் எரிவாயு கசிவு ஏற்பட்டால், மின்சாதன பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும், சன்னல்கள், கதவுகள் ஆகியவற்றை உடனடியாக திறந்து காற்றோட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துவதும், உடனடியாக எண்ணெய் நிறுவனங் களின் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் எரிவாயு கசிவை சரி செய்வதும் அவசியம்.
விபத்துகளை தவிர்க்க எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு முகவர்கள், நுகர்வோர் ஆணையர் மற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோரைக் கொண்டு அடிக்கடி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றார் அமைச்சர்.