Published : 27 Feb 2018 07:33 AM
Last Updated : 27 Feb 2018 07:33 AM

தேசிய துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து உட்பட சென்னை தையூரில் ரூ.70 கோடியில் கடலோர தொழில் நுட்ப ஆய்வு மையம்: நிதின் கட்கரி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை அருகே தையூரில் ரூ.70 கோடியில் அமையவுள்ளதேசிய துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து மற்றும் கடலோர தொழில்நுட்ப ஆய்வு மையத்துக் கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், தேசிய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம், சென்னை ஐஐடி ஆகியவை இணைந்து சென்னை அருகேயுள்ள தையூரில் ரூ.70 கோடி செலவில் தேசிய துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து, கடலோர தொழில்நுட்ப ஆய்வு மையத்தை அமைக்க இருக்கின்றன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி மற்றும் அடிக்கல் நாட்டுவிழா சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்றது.

மத்திய கப்பல் போக்குவரத்து்த்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச் சக இணைச் செயலாளர் (சாகர் மாலா திட்டம்) ஆர்.கே.அகர்வாலும் ஒப்பந்தத்ததில் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதிய ஆய்வு மையத்துக்கு அடிக்கல் நாட்டி அந்த மையத்தின் இணையதளத்தை தொடங்கிவைத்தார்.

அவர் பேசும்போது, “துறைமுகங்களை மேம்படுத்தும் வகை யில் சாகர் மாலா திட்டம் ரூ.15 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ரூ.4 லட்சம் கோடியில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ரூ.2.8 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. துறைமுகங்களைச் சுற்றி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

சாலை போக்குவரத்து, துறைமுக மேம்பாடு போன்றவற்றில் ஐஐடி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் ஆய்வுப்பணிகளுக்கு தேவையான நிதியை தரவும் மத்திய அரசு தயாராக உள்ளது. 117 ஏரிகளை உள்நாட்டு நீர்வழித்தடங்களாக மாற்ற முடிவு செய்துள்ளோம். கடல் போக்குவரத்தில் டீசலுக்குப் பதிலாக மெத்தனால் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் எரிபொருள் செலவு மிச்சமாவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்” என்றார்.

விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக இணைச் செயலர் ஆர்.கே.அகர்வால், சென்னை துறைமுக தலைவர் பி.ரவீந்திரன், இந்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணைய உறுப்பினர் (தொழில்நுட்பம்) சஞ்சய் குமார் கேங்வார், பேராசிரியர் கே.முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமஸ்கிருத பாடலால் சர்ச்சை

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம். இது ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது ஐஐடியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக இறைவணக்க பாடலாக “மகா கணபதி” என்ற சமஸ்கிருத பாடலை பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறும்போது, “மாணவர்கள் தங்கள் விருப்பப்படிதான் சமஸ்கிருத பாடலை பாடினர். இந்த சர்ச்சை தேவையில்லாதது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x