

அரூர்: அரூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் வெயிலால் பயணிகள் அவதிப்படுவதை தவிர்க்க கூடுதலாக குடிநீர், நிழற்கூட வசதி செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கி நவீனப்படுத்தும் விதமாக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலமாக ரூ.3 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு தற்போது புதிய கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக தற்காலிக பேருந்து நிலையம், வர்ண தீர்த்தம் முதல் டிஎஸ்பி அலுவலகம் வரை உள்ள சாலையின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது.
தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும் தற்காலிகப் பேருந்து நிலையப் பகுதியில், போதிய அளவிற்கு குடிநீர் மற்றும் நிழற்கூட வசதிகள் இல்லையென பொது மக்கள் மற்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பேரூராட்சி சார்பில் தற்காலிக கழிப் பறைகள் மற்றும் ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவை போதுமானதாக இல்லை. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது.
இதனால் பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகள் தற்காலிக பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடைகளில் விலைக்கு தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலை உள்ளது. தவிர கொளுத்தும் வெயில் காரணமாக அங்குள்ள கடைகளின் நிழலில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் கூடுதலாக நிழற்கூடங்கள்அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேருந்து பயணி ராஜேந்திரன் கூறுகையில், பொது மக்களின் வசதிக்காக ஓரிரு இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் போதுமானதாக இல்லாததால் விலைக்கு தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. சுமார் 400 மீட்டர் தூரம் வரை பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்கும் நிலையில் பயணிகளுக்கான போதிய நிழற்கூடம் இல்லை. கடைகளின் முன்பு நிழலுக்காக நிற்பதற்கும், கடைகளில் உள்ள குடிநீரை அருந்து வதற்கும் கடைக்காரர்கள் அனுமதிப்பதில்லை. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில் பயணிகளின் வசதிக்காக தேவையான வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டும், என்றார்.