தீவுத்திடல் கண்காட்சி: 28 நாளில் 3.75 லட்சம் பேர் வருகை
சென்னை: தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலாத்துறை கண்காட்சிக்கு 28 நாளில் 3.75 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 14-ம் தேதி தொடங்கியது.
70 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலா கண்காட்சியில் 51 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர கடைகள், பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு பள்ளி மாணவர்கள் இசை நிகழ்ச்சி, நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், 28-வது நாளான கடந்த 10-ம் தேதி மட்டும் 15,120 பேர் பார்வையிட்டுள்ளனர். அந்தவகையில், 28 நாட்களில் மொத்தம் 3,11,543 பெரியவர்கள், 63,826 சிறியவர்கள் என 3,75,369 பேர் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
