

சென்னை: கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 6-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மயிலாப்பூர் டிசில்வா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தயாள சுந்தரம் (44). மருத்துவரான இவரது மகன் ரியான் (11).இவர் ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
கூடைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டியதால் பெற்றோர் ரியானை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏமைதானத்தில் நடைபெற்றுவரும் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் சேர்த்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மைதானம் அருகே தரை வழியாக பாதுகாப்பற்ற முறையில் சென்றதாக கூறப்படும் ஒயரிலிருந்து கசிந்த மின்சாரம் ரியான் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்து சைதாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் நிகழ்விடம் விரைந்து மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரியான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்துசைதாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவன் இறந்த ஒய்எம்சிஏ மைதானத்தில் வார இறுதி நாட்களில் பிரம்மாண்டமான முறையில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மின்சாரம் தாக்கி ரியான் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.