Published : 12 Feb 2024 06:10 AM
Last Updated : 12 Feb 2024 06:10 AM

மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் பாமக குறித்து அவதூறு செய்திகள் பரப்பப்படுகின்றன: வழக்கு தொடருவோம் என அன்புமணி எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த வெங்கடாபுரத்தில் 60 அடி உயர மின்கோபுர விளக்கை திறந்து வைத்த பாமக தலைவர் அன்புமணி, பாமக குறித்து அவதூறு செய்திகளைப் பரப்புவதை வன்மையாகக் கண்டிப்பதோடு, சட்டப்படி வழக்கு தொடருவோம் என எச்சரித்தார்.

பாமக தலைவர் அன்புமணியின் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சேலம், திண்டிவனம், காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் 60 அடி உயரமுள்ள உயர் கோபுர மின் விளக்கு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், காஞ்சிபுரம், செவிலிமேட்டில் இருந்து பெங்களூரு மற்றும் வேலூர் செல்லும் புறவழிச் சாலையில், வெங்கடாபுரம் பகுதியில் நான்கு வழி சந்திப்பில், ரூ.7.50 லட்சம் செலவில் புதிதாக 60 அடி உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், அன்புமணி பங்கேற்று மின்விளக்கை பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார். மேலும், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் பாமக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர், அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீப நாட்களாக என்னைப் பற்றியும், பாமக பற்றியும் சில ஊடகங்களில் சிலர் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தரம் தாழ்ந்த விமர்சனங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் சட்டரீதியாக வழக்குகள் தொடுக்கப்படும்.

பாமக மக்கள் பிரச்சினைகளுக்காக, தொடர்ந்து குரல் கொடுத்து நேர்மையாகப் போராடி வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த ஒரு பணிகளையும் முழுமையாக முடிக்காமல், அவசர கதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது தவறு.

போதிய இணைப்பு போக்குவரத்து வசதிகள் இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் சூர்யா தர்மராஜ் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x