

சாத்தூர்: சாத்தூர் அருகே வைப்பாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்பட வில்லை. இதனால், ஆற்றில் தண்ணீர் வரும்போது அச்சன்குளம் கிராம மக்கள் 25 கி.மீ. தூரம் சுற்றிச் சென்று இரவார்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வரும் நிலை உள்ளது.
சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளம் - இரவார்பட்டி இடையே வைப்பாறு கடக்கிறது. இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றின் குறுக்கே தரைப் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் திறக்கப்பட்ட 3 மாதங்களில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு பகுதி சேதம் அடைந்தது. அப்போது, முதல் தற்போது வரை பாலம் சீரமைக்கப்படவில்லை. இந்தத் தரைப் பாலம் வழியாகவே அச்சன்குளம் கிராமத்தில் உள்ள 126 குடும்பத்தினரும் ஆற்றைக் கடந்து சென்று இரவார் பட்டியில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
ஆனால், ஆண்டுதோறும் வெம்பக்கோட்டை அணை யிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் இந்தத் தரைப் பாலத்தைக் கடக்க முடி யாமலும், அவசரத் தேவைக்காகச் சென்று வர முடியாமலும் கிராம மக்கள் தவிக்கின்றனர். இதனால், ரேஷன் கடைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது வேறு வழியின்றி அச்சன்குளம் கிராமத்தினர் சாத்தூர் அல்லது வெம்பக்கோட்டை வழியாக 25 கிமீ. தூரம் சுற்றிச் சென்று இரவார்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று வருகின்றனர்.
அண்மையில் பெய்த தொடர் மழையால் அணைகள் நிரம்பின. இதனால் வைப்பாற்றில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் பெருக் கெடுத்துச் செல்கிறது. தற்போது வரை, அச்சன்குளம் கிராம மக்கள் 25 கி.மீ. தூரம் பயணம் செய்து இரவார்பட்டிக்குச் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இது குறித்து அச்சன்குளம் கிராம மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் வசிக்கும் பலரும் கூலித் தொழிலாளர்கள். பலர் பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வருகிறோம். பெரும்பாலானோர் ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரிசியை பயன்படுத்து கிறோம். அதோடு, வெம்பக் கோட்டைக்கு ஒரு பேருந்திலும், அங்கிருந்து இரவார்பட்டிக்கு மற்றொரு பேருந் திலும் செல்ல வேண்டியுள்ளது. மீண்டும், இதே போன்று திரும்பிவர வேண்டும். இதனால் ஒரு நாள் வேலைக்குச் செல்ல முடியாமல் ஊதியம் இழப்பு ஏற்படுகிறது.
சேதமடைந்த தரைப் பாலத்தைச் சரி செய்து தருமாறு பலமுறை அரசு அதிகாரிகளிடமும், அமைச்சர் களிடமும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அச்சன்குளம் - இரவார்பட்டி இடையே வைப்பாறு தரைப் பாலத்தை உடனடியாகச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.