

திருச்சி: விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினமான நேற்று திருச்சி மத்தியபேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அனைத்து அரசு பேருந்துகளும் முழு இருக்கைகள் நிரம்பிய நிலையிலேயே இயக்கப்பட்டன.
இதனால், திருச்சியில் இருந்து நேற்று சென்னைக்கு இயக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் முன்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் படி, திருச்சி - சென்னை இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கட்டணமாக ரூ.1,610 வசூலிக்கப் பட வேண்டும். ஆனால் நேற்று திருச்சியில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆம்னி பேருந்தில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப் பட்டது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் ஹரி ஹரன் கூறியது: விசேஷ மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் போது, பயணிகள் கூட்டம் அதிகரிப்பை காரணம் காட்டி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மிக மிக அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே இது போன்ற சமயங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் செயலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் கூறியது: சென்னைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கத்தில் பற்றாக் குறை ஏற்படும் போது, அவற்றை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்படுகிறது. இதை தடுக்க விடுமுறை நாட்களில் கூட, ஆங்காங்கே ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு சோதனையிடப் படுகிறது. இது போன்ற செயல்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.