

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்அவசர கதியில் திறக்கப்பட்டதால் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோயம்பேடு பேருந்து நிலையமும் அதன் சுற்றுப் பகுதிகளும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்ல கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்து வசதி, மெட்ரோ ரயில் வசதி, ஷேர்ஆட்டோ, ஆட்டோ, சிற்றுந்து வசதிகள், உணவு விடுதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அமையும் வகையில் எங்கள் ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலைய பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கலைஞர் பேருந்து நிலையம் என்று ஸ்டிக்கர் ஒட்டி அவசரகதியில் திமுக அரசு தைப் பொங்கலுக்கு முன்பே பேருந்து நிலையத்தைத் திறந்துவிட்டது. அங்கு அடிப்படை வசதிகளும் இல்லை. போதுமான பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
கடந்த 9-ம் தேதி இரவு தங்களதுகுழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்துக்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், போதுமானபேருந்துகள் இயக்கப்படாத நிலையில், நேற்று காலை வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளிலும், வெட்ட வெளிகளிலும் படுத்துறங்கி அவதியுற்றனர். தங்களது ஊர்களுக்கு உடனடியாக பேருந்துகளை விடச்சொல்லி ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்துஅடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
எந்தவித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார்40 கி.மீ. தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றி, 40 நாட்களை கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்ல முடியாமல் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.