Published : 11 Feb 2024 06:59 AM
Last Updated : 11 Feb 2024 06:59 AM

அரக்கோணம் இச்சிபுத்தூர் ஊராட்சி தலைவர், செயலாளருக்கு எதிராக வழக்கு: ராணிப்பேட்டை ஆட்சியர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமல், போலியாக கணக்கு காட்டிரூ.2.48 கோடி முறைகேடு செய்ததாக இச்சிபுத்தூர் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் பெரிய ஈசலாபுரத்தைச் சேர்ந்த எம்.ராமச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரக்கோணம் வட்டத்துக்கு உட்பட்ட இச்சிபுத்தூரில் மின் விளக்குகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தது, பம்பு செட் அமைத்துக் கொடுத்தது என, செய்யாத வேலைகளை செய்ததாக போலியாக கணக்கு காண்பித்து, ஊராட்சித் தலைவர் பத்மநாபன் மற்றும் ஊராட்சி செயலர் இப்ராஹிம் ஆகியோர் ரூ.2.48 கோடியை முறைகேடு செய்துள்ளனர். ஆனால், எந்தப் பணியும் நடைபெறவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர், அரக்கோணம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அரசுப் பணத்தை முறைகேடு செய்த இச்சிபுத்தூர் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சவுந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக ராமச்சந்திரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி, "எந்த வேலையும் செய்யாமல் போலியாக கணக்கு காண்பித்து ரூ.2.48 கோடியை முறைகேடு செய்துள்ளனர்" என்றுகூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். மேலும், மனுதாரரைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.

அதையடுத்து நீதிபதி, "இந்த வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x