

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்துதாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை மத்திய அரசு இதுவரை கண்டிக்கவில்லை என்றுபுகார் தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு மற்றும் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறும்போது, "இலங்கை அரசு இதுவரை தமிழக மீனவர்களின் 350 விசைப்படகுகளை அரசுடமையாக்கி உள்ளது. அவற்றில்250 படகுகள் சேதமடைந்துவிட்டன. ஆனாலும், மத்திய அரசு, இலங்கையைக் கண்டிக்கவில்லை. இது தொடர்ந்தால், காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.