Published : 11 Feb 2024 04:02 AM
Last Updated : 11 Feb 2024 04:02 AM
சென்னை: கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் வசம் உள்ள அரசுக்கு சொந்தமான 26 கிரவுண்ட் நிலத்தை 2 மாதங்களில் மீட்க சென்னை பெருநகர சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறு தொழில் கழகத்துக்கு ( டான்சி ) சொந்தமான 26 கிரவுண்ட் நிலத்தை, ஈகிள் பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் மாத வாடகை ரூ.12 ஆயிரத்து 36 என்ற அடிப்படையில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து பயன்படுத்தி வந்தது. இந்நிறுவனத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு வரை உரிமம் தரப்பட்ட நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஆய்வு செய்த தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அந்நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி விட்டது எனக் கூறி தொழிற்சாலைகளின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த நிலத்தை காலி செய்து ஒப்படைக்கும் படி டான்சி சார்பில் சென்னை பெருநகர சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2007-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டான்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை பெருநகர 7-வது சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.தமிழ் செல்வி முன்பாக நடந்தது. அப்போது டான்சி தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். ரமன்லால் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி, ‘‘அரசுக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஈகிள் பிளாஸ்டிக் நிறுவனம் பயன்படுத்தவில்லை.
அந்தநிறுவனத்தில் தற்போது 3 பேர்மட்டுமே பணிபுரி்ந்து வருகின்றனர். பிளாஸ்டிக் உற்பத்தி நடைபெறவில்லை’’ என வாதிட்டனர். இதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து நீதிபதி, ‘‘அதிகாரிகள் நடத்திய களஆய்வில் அந்நிறுவனத்தி்ல் 3 பேர் மட்டுமே பணி புரிகின்றனர் என்பதும், அந்நிறுவனம் தற்போது உற்பத்தியை நிறுத்திவிட்டதும் ஆதாரப் பூர்வமாக தெரியவந்துள்ளது. எனவே டான்சிக்கு சொந்தமான அந்த நிலத்தை அந்த நிறுவனம் 2 மாதங்களில் காலி செய்து ஒப்படைக்க வேண்டும். அரசும்அந்த நிலத்தை மீட்க சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்’’ என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT