Published : 10 Feb 2024 08:58 AM
Last Updated : 10 Feb 2024 08:58 AM
சென்னை: பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சென்னையில் உள்ள 2 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அதன்படி, தி.நகர் 27-வது தெருவில் உள்ள லேண்ட்மார்க் ஹவுசிங் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் உதயகுமாரின் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில்அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், புளியந்தோப்பில் உள்ள கேஎல்பி புராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் சுனில் கேட்பாலியா, மனிஷ் பம்பர் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடந்தது. மேலும், எம்ஜிஎம் கோல்ட் மதுபான ஆலை நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்த் வீடு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆடிட்டர் கணபதி வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 - 2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு லஞ்சமாக ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்ததையடுத்து, சட்டவிரோத பணம் பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு வரை தொடர்ந்த இந்த சோதனையில், ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கட்டுமான நிறுவனங்களின் வங்கி கணக்குகள், பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT