Published : 10 Feb 2024 06:21 AM
Last Updated : 10 Feb 2024 06:21 AM
உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, வரும் பிப். 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், கோடநாடு பங்களாவில் குற்றம் நடைபெற்ற இடத்தை, நீதிபதி பார்வையிட வேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் விஜயன்,முனிரத்தினம் ஆகியோர் ஆஜராகினர். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் குற்றம் நடைபெற்ற இடத்தை நீதிபதி பார்வையிட வேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்துஅரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தாக்கல் செய்வதற்காக, விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அப்துல்காதர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைத் தன்மை குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம், மாவட்டஅமர்வு நீதிமன்ற நீதிபதி கேட்டறிந்தார்.
வழக்கு தொடர்பான தொலைத்தொடர்பு சாதனங்களின் அறிக்கைகள் நீதிமன்றத்துக்கு வந்தவுடன், அதன் நகல்களைப் பெற்றுக்கொண்டு, சிபிசிஐடி போலீஸார் தலைமையில் விசாரணை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்தரப்பு வழக்கறிஞர் விஜயன் கூறும்போது, "கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில், பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், பல்வேறு துறைகளின் ஆய்வு நடக்க இருப்பதால், குற்றம்நடைபெற்ற இடத்தை நீதிபதி பார்வையிட வேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT