Published : 10 Feb 2024 06:15 AM
Last Updated : 10 Feb 2024 06:15 AM
சென்னை: மக்களவை தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அரசியல் கட்சிகள் வழங்கி வருகின்றன. மக்களவை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரிஇறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட தேர்தல் அலுவலகமும், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் 3 மக்களவை தொகுதிகளும், அவற்றில் 16 சட்டப்பேரவை தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. 16 சட்டபேரவை தொகுதிகளில் 19 லட்சத்து 17,135 ஆண், 19 லட்சத்து 82,875பெண், 1,157 இதரர் என 39 லட்சத்து 1,167 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எண்ணப்பட உள்ளன. இம்மாவட்டத்தில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளுக்கான முகவர்களை நியமித்து, அது தொடர்பான பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முகவர்கள் பட்டியலை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மக்களவைதொகுதிக்கு உட்பட்ட சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, துறைமுகம், ஆயிரம்விளக்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சுரேஷிடம், மத்தியசென்னை - கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் நேற்று வழங்கினார்.
அப்போது, மத்தியசென்னை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் லட்சுமி ராமச்சந்திரன், மாநில வழக்கறிஞர் பிரிவுஇணைத் தலைவர் எஸ்.கே.நவாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அவை சார்பில் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை வழங்கி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT