

சென்னை: டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையின் 7-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் முப்பெரும் விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடுடாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவின்போது, டாக்டர் வி.எஸ்.நடராஜன் எழுதிய, வயதான நோயாளிகளை எப்படி கவனிப்பது என்பது குறித்த ‘Text Book on Geriatric Nursing’ என்கிற ஆங்கில புத்தகத்தை சுதா சேஷய்யன் வெளியிட்டார். துணை ஆசிரியர் கவுசல்யா சாரதி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அறக்கட்டளையின் சார்பில்முதியோர் பராமரிப்பாளர் ஆதரவு இயக்கத்தை, அதன் இணை நிறுவனர் ராஜசேகரன் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து சுதா சேஷய்யன் பேசியதாவது: முதியோர்களுக்கான செவிலியர் சேவை என்பது சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை முதியவர்களுக்கு அளிக்க முடியாது. முதியோர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை. சில நேரங்களில் முதியோர் பேசுவதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இவற்றை செவிலியர்கள் பக்குவமாக அணுகவேண்டியது அவசியம்.
நோயாளியின் உடல்நலம் முன்னேற்றத்துக்கு செவிலியர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு நோயாளி விரைவாக குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றால், அதில் மருத்துவரைக் காட்டிலும் செவிலியர்களின் பங்கு அதிகம். மருத்துவர் மருந்து கொடுக்கலாம். சிகிச்சைக்கான செயல்முறைகளை விளக்கலாம். ஆனால் களத்தில் நின்று ஒவ்வொரு நொடியும் அவற்றை செயல்படுத்தக் கூடியவர்கள் செவிலியர்கள்தான்.
மருந்துகளைக் காட்டிலும் செவிலியர்களின் புத்துணர்ச்சியே முதியோர்களுக்கு முக்கியமானது. இவையே நோயாளிகளை விரைந்து குணமடையச் செய்யும். செவிலியர்கள் எப்படி நடந்து கொண்டால் நோயாளிகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை இன்று வெளியிட்டபுத்தகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் பேசுகையில், “ஒவ்வொரு நோய்க்கும் செவிலியர்களின் அணுகுமுறை வேறுபட்டிருக்கும். இது தொடர்பாக புத்தகத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் செவிலியர்களுக்கு மட்டுமின்றி மாணவர்கள், முதியோர் பராமரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்” என்றார்.