

சென்னை: வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் 3 கிலோவாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை பெறுவதில் இருந்து விலக்கு அளிக் கப்பட்டு உள்ளது.
வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் பல்வேறு திறனில் சூரியசக்தி மேற்கூரை (ரூஃப் டாப்சோலார்) எனப்படும் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்படுகிறது.
இதை அமைக்க சாத்தியம் உள்ளதா என்பதற்காக மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சாத்தியக்கூறு அறிக்கை பெறவேண்டும். இதற்கு மின்வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதிவழங்க மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் தாமதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, 3 கிலோவாட் வரைமேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க சாத்தியக்கூறுஅறிக்கை தேவையில்லை எனமின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான சூரியசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுத்துவருகிறது. தற்போது, தமிழகத்தில்சூரியசக்தி மின்உற்பத்தித் திறன்7,372 மெகாவாட்டாக உள்ளது. இதில், 526 மெகாவாட் கட்டிடங்களின் மேல் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின்நிலையங்கள் ஆகும்.
மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைத்து சூரியசக்தி மின்உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விண்ணப்பிக்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, தாழ்வழுத்த மின்இணைப்பில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம்மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறையை மேலும் விரைவுபடுத்த 3 கிலோவாட் வரையிலான சூரியசக்தி மின்நிலையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக பதிவு செய்து இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றனர்.