Last Updated : 10 Feb, 2018 06:32 PM

 

Published : 10 Feb 2018 06:32 PM
Last Updated : 10 Feb 2018 06:32 PM

பக்தர்கள் வேடத்தில் நாமக்கல் வந்த கொள்ளையர்கள்: வீடியோ கால் செய்து பொறி வைத்துப் பிடித்த போலீஸார்

பக்தர்கள் வேடத்தில் நாமக்கல் வந்த கொள்ளையர் கூட்டத்தை போலீஸார் வீடியோ கால் மூலம் பொறி வைத்துப் பிடித்தனர்.

நாமக்கல்லில் போலீஸ் கூடுதல் எஸ்.பி செந்தில் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் கடந்த மாதம் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பக்தர்கள் வேடத்தில் இருவர் வந்தனர்.

அவர்களை மறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் இருவரும் முரணாகவே பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் இருந்த நம்பர் பிளேட் போலியானது எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் மத்தியப் பிரதேசம் புர்ஹான்பூரைச் சேர்ந்த 25 வயது குணால் என்பது தெரியவந்தது. தங்களுடன் மத்தியப் பிரதேசத்தையும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் இருப்பதையும் தெரிவித்தனர்.

இந்த இருவரும் கர்நாடக மாநிலத்தில் கொள்ளையடித்து முடித்து தமிழகத்துக்குள் கைவரிசையை காட்ட ஒசூர் வழியாக வந்துள்ளனர். இவர்களின் கொள்ளைத் திட்டம் குறித்து போலீஸார் கூறுகையில், ''பிடிபட்ட இருவரும் ஒரு இடத்தை கொள்ளையடிப்பதற்கு முன், கொள்ளையடிக்க போகும் இடம், அங்கிருந்து தப்பித்துச் செல்வது எப்படி, சாலை வசதி எப்படி இருக்கிறது, பிரதான சாலைக்கு எப்படிச் செல்வது உள்ளிட்டவற்றை தெளிவாக அறிந்து கொள்வார்கள், அதன்பின் அதை தங்களின் கூட்டத்தினருக்கு சொல்வார்கள்.

அந்தக் கொள்ளை கும்பல் வீடுகளிலும், கடைகளிலும் இரவு நேரத்தில் கொள்ளையடித்து, தப்புவார்கள். காரில் தப்பிச்செல்லும் போது, அவ்வப்போது காரின் நம்பர் பிளேட்டை மாற்றிக்கொண்டே செல்வார்கள். அந்தக் கொள்ளை கும்பலுக்கு இந்த இருவரும் பாதைகளைக் கூறுவார்கள். இதுபோலவே பல இடங்களில் கொள்ளையடித்து வந்துள்ளனர்.

இதையடுத்து குணாலின் கூட்டத்தைப் பிடிக்க முடிவு செய்தனர். தனக்கு விபத்து நேர்ந்துவிட்டதாகவும், உதவிக்கு வருமாறு தனது கூட்டத்தினரை அழைக்க வேண்டும் என போலீஸார் குணாலிடம் கூறினர். ஆனால், குணாலும் செல்போனில் பேசினார். ஆனால், அவர் கூறியதை கூட்டத்தினர் நம்பாமல் வீடியோ கால் செய்யக் கூறினர்.

உடனடியாக போலீஸார், குணாலையும், உடன் வந்தவரையும், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவருக்கும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுவதுபோல் தலை, கைகாலில் கட்டுகள் போட்டு வீடியோ கால் செய்யக் கூறினர்.

இதையடுத்து, குணால் வீடியோ கால் செய்தபோது, அதை கூட்டத்தினர் பார்த்து, நம்பினர். தாங்கள் சேலத்தில் இருப்பதாகவும், சேலம் அரசு மருத்துவமனைக்கு வருமாறு கூறினர்.

இதையடுத்து, குணாலை ஒரு ஆம்புலன்ஸில் அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் போலீஸார் உடன் சென்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் குணாலை அனுமதித்து, அங்கு மாறுவேடத்தில் போலீஸார் காத்திருந்தனர். குணாலை பார்க்க அவரின் கூட்டத்தினர் வந்தபோது, மருத்துவமனையைச் சுற்றி மாறுவேடத்தில் இருந்த போலீஸார் ஒட்டுமொத்த கூட்டத்தினரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x