Published : 09 Feb 2024 05:25 AM
Last Updated : 09 Feb 2024 05:25 AM
திருநெல்வேலி: கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் அமைப்பது தொடர்பாக இந்திய - ரஷ்ய அணுசக்தித் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவின் ஆலோசனை கூட்டம் 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ரஷ்ய அணுசக்தி கழக தலைமை செயல் இயக்குநர் அலெக்ஸ் லிக்காசேவ், இந்திய அணுசக்தித் துறை தலைவர் மற்றும் செயலர் டாக்டர் அஜித்குமார் மொஹந்தி தலைமையிலான உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தியா, ரஷ்யா இடையிலான அணுசக்தித் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு உலைகளுக்கான கட்டுமானத்தை விரைவுபடுத்துவது, அவற்றுக்கான உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும், கூடங்குளத்தில் கூடுதல்அணு உலைகள் அமைப்பது குறித்தும், இந்தியாவின் பிற பகுதிகளில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் அணு உலைகள் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூடங்குளத்தில் கட்டப்பட்டுவரும் 3, 4, 5, 6-வது அணு உலைகளை விரைவாக கட்டி முடிப்பது குறித்தும், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா,சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியநாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேசெய்துகொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் கூடுதல் அம்சங்களை இணைத்து, இந்தியாவில் கூடுதல் அணுஉலைகளை கட்டுவதற்காக இரு நாட்டு உயரதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்ந்து, ரஷ்ய அணுசக்தித்துறை அதிகாரிகள், கூடங்குளத்தில் நடைபெறும் அணு உலைகளின்கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT