Published : 09 Feb 2024 05:22 AM
Last Updated : 09 Feb 2024 05:22 AM

இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது: தேனியில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்கம்

தேனியில் நேற்று வேளாண்மைக் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: நா.தங்கரத்தினம்

தேனி: நாடு முழுவதும் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாகவே உள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தேனி அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், பெண் விவசாயிகள், பெண் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.கீதாலட்சுமி, அவினாசிலிங்கம் பல்கலை. துணைவேந்தர் வி.பாரதிஹரிசங்கர் முன்னிலை வகித்தனர். வேளாண் அறிவியல் மையத் தலைவர் பெ.பச்சைமால் வரவேற்றார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமை வகித்து, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியை திறந்துவைத்துப் பேசியதாவது: நாடு சுதந்திரமடைந்தபோது உணவு உற்பத்தியில் பின்தங்கி இருந்த நாம், தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளோம்.

நாட்டின் வளர்ச்சிக்கு விவசாய மேம்பாடு மிகவும் அவசியம். விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றுவதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும். மேலும், விற்பனைச் சந்தையில் விவசாயிகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

வேளாண் அறிவியல் மையங்கள், இலவச தங்கும் வசதியுடன்பெண்களுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி, கடனுதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. பயிற்சி பெறும் சுயஉதவிக் குழுக்கள் மூலம், அவர்களின் குடும்பம் மட்டுமின்றி சமுதாயமே உயரும்.

நமது நாட்டில் 60 சதவீதம் பேர்விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், நாட்டின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாகவே உள்ளது. விவசாயம் என்பது உணவு சார்ந்தது. அதை எந்தத் துறையுடனும் ஒப்பிடமுடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், வாழை, மா சாகுபடிவிவசாய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை ஆளுநர் வெளியிட்டார்.மேலும், சிறந்த தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில், ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்பப் பயன்பாட்டு நிலைய இயக்குநர் ஷேக் என்.மீரா, தமிழ்நாடு வேளாண்பல்கலை. இயக்குநர் பி.பி.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தேனி-மதுரை சாலையில் உள்ள மேரி மாதாபள்ளியில் மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் கலந்துரையாடினார். அப்போது, செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். புத்தகங்களைப் படிக்கஅதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இண்டியா கூட்டணி ஆர்ப்பாட்டம்: விவசாயக் கருத்தரங்கில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேனி காமராஜர் பேருந்து முனையம் அருகே `இண்டியா' கூட்டணிக் கட்சியினர் நேற்று கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.பி.முருகேசன், மார்க்சிய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தலைமை வகித்தனர். தமிழக அரசுக்கு ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்துவருவதாகக் கூறியும், ஆளுநரைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம்எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x