Published : 04 Feb 2018 11:00 AM
Last Updated : 04 Feb 2018 11:00 AM

உலகில் முதல்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பிரத்யேக யுடியூப் சேனல்: கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் தொடக்கம்

உலகிலேயே முதல்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பிரத்யேக யுடியூப் சேனல் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பிப். 4-ம் தேதி சர்வதேச புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, குணப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் நடப்பாண்டுக்காக புற்றுநோய் வாச கம் ‘நம்மால் முடியும்; என்னால் முடியும்’ என்று அறிவித்துள்ளது. புற்றுநோய் விழிப்புணர்வுக்காக உலகிலேயே முதல்முறையாக பிரத்யேக யுடியூப் சேனல் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப் பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.மூர்த்தி, பிரத்தியேக யுடியூப் சேனலை நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மி நாராயணசுவாமி தலைமை வகித்தார். புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பி.குகன் வரவேற்றார். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டாக்டர் பி.குகன் கூறியதாவது: 2020-ல் இந்தியா வில் ஏறத்தாழ 17.30 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்றும், புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 8.80 லட்சமாக இருக்கும் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 60 முதல் 70 சதவீதம் நோயாளிகள் முற்றிய நிலையிலேயே மருத்துவர்களை அணுகுகின்றனர்.

இதனால் அவர்களைக் காப்பாற்றும் வாய்ப்புகள் குறைகின்றன. எனவேதான் ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கடந்த 15 ஆண்டுகளாக துண்டுப் பிரசுரங்கள், புற்றுநோயைக் கண்டறியும் முகாம்கள், தொலைபேசி, செல்போன் மூலமான பிரச்சாரங்கள், புற்றுநோய் விழிப்புணர்வுக் கான இணையதளம், செயலி அறிமுகம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளது.

14 வகை புற்றுநோய்கள்

நடப்பாண்டு சர்வதேச புற்று நோய் தினத்தையொட்டி, உலகிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான பிரத்யேக யுடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான புற்றுநோய்கள், தலை, கழுத்து, பெருங் குடல், மூளை, வயிறு, வெள்ளையணு பிளாஸ்மா, ரத்தத்தில் சேரும் தேவையற்ற செல்களின் வளர்ச்சி, கணைய புற்றுநோய், கர்ப்பப்பை, மார்பகப் புற்றுநோய் போன்ற 14 வகையான புற்றுநோய்கள் தொடர்பான விழிப்புணர்வு படக்காட்சிகள் யுடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு புற்றுநோய் தொடர்பாகவும் 7 விளக்கங்கள் தரப்பட்டுள்ளதுடன், புற்றுநோய்க்கான காரணிகள், சிகிச்சை முறை, வரும் முன் காக்கும் முறைகள், தடுப்பு முறைகள் குறித்த தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

இதைக் காண யுடியூப் இணையதள பக்கத்தில் எஸ்ஆர்ஐஓஆர் (SRIOR) என்ற வார்த்தையை உள்ளீடு செய்தால் cancer awareness SRIOR என்ற சேனல் வரும். அதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 14 வீடியோக்கள் உள்ளன.

பொதுமக்களிடையே புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, குணப்படுத்தி, இறப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

மேலும், இந்த மாதம் முழுவதும் ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் விந்தகப்பை சுரபியில் ஏற்படும் புற்று நோய் பரிசோதனை மற்றும் அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை இலவசமாக செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x