Published : 09 Feb 2024 04:06 AM
Last Updated : 09 Feb 2024 04:06 AM
தருமபுரி: தருமபுரி அருகே மின்சார வசதி இல்லாத மலைக் கிராமத்தில் சோலார் மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்த தருமபுரி எம்எல்ஏ, அந்த கிராம மக்களுடன் ஓர் இரவு தங்கியிருந்து திரும்பினார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் பையன் குட்டை, கெஜமான் குட்டை, ஒட்டன்கொல்லை, மல்லன் கொல்லை, வாழமரத்துக் குட்டை ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. மிட்டாரெட்டிஅள்ளி அடுத்த கோம்பேரியில் இருந்து சுமார் 8 கி.மீட்டர் தொலைவில் வனப் பகுதியின் நடுவில் அமைந்துள்ள இந்த கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். வாகனங்கள் செல்ல சாலை வசதி இல்லாத நிலையில் இந்த கிராம மக்கள் நடை பயணமாகவே அடிவாரம் வரை பயணிக் கின்றனர்.
மேலும், இந்த கிராமத்துக்கு இதுவரை மின்சார வசதியும் இல்லை. மலையில் உள்ள சுமார் 400 ஏக்கர் பட்டா நிலங்கள் தான் இந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக உள்ளன. கால்நடை வளர்ப்பையும் உப தொழிலாக மேற்கொள்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை மலை மீது அமைக்கப்பட்டுள்ள கிணறு நிறைவேற்றி வருகிறது. ரேஷன் பொருட்கள் வாங்க மிட்டா ரெட்டி அள்ளிக்கு தான் வர வேண்டும். மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அடிவாரம் வரை நடந்து சென்று பின்னர் பேருந்துகள் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சில மாதங்களுக்கு முன்பு கிராம மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், மின் வசதியும், சாலை மற்றும் குடிநீர் வசதியும் செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் சோலார் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நிதி ஒதுக்கி பரிந்துரை கடிதங்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி தொடர் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, கிராமங்களில் 20 இடங்களில் சோலார் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது.
சோலார் விளக்குகளின் பயன்பாட்டை எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு மலைக்கு சென்று தொடங்கி வைத்தார். மேலும், விளக்கு வசதி அந்த கிராம மக்களிடையே ஏற்படுத்திய மகிழ்ச்சியை முழுமையாகக் கண்டுணர அன்றிரவு கிராமத்திலேயே தங்கினார். நிகழ்ச்சியின் போது, பாமக மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், மாவட்ட பொறுப்பாளர் பால கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் அன்பு கார்த்திக், ஒன்றிய தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT