

சென்னை: ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை 75 சதவீதம் இணையவழியில் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுக்கு, பணி முன் பயிற்சி, பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி, நிர்வாக அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த பயிற்சிகளின்போது பல்வேறு ஆசிரியர்கள், அலுவலர்கள் சில சிரமங்களை சந்தித்து வருவதாக கோரிக்கை எழுந்தன. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து பிறப்பித்துள்ள உத்தரவு:
பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், கல்வியாளர்கள் வெளியிடங்களுக்குச் சென்று பயிற்சிபெறுவதைவிட தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக பயிற்சியை பெறுவதுஎளிதாக இருக்கும்.
எனவே, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2024-25-ம் கல்வியாண்டு நடத்த திட்டமிட்டுள்ள பயிற்சிகளில் குறைந்த பட்சம் 75 சதவீதம் பயிற்சிகளை இணைய வழியிலான பயிற்சியாகவும், மீதமுள்ள பயிற்சிகளை நேரடியான பயிற்சியாகவும் வழங்க வேண்டும். இதற்கான திட்டமிடலை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.