Published : 09 Feb 2024 05:42 AM
Last Updated : 09 Feb 2024 05:42 AM
சென்னை: துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்குமேம்பாலத்துக்கான ஆரம்பக்கட்ட அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், நெடுஞ்சாலை துறை சார்பிலும் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்றுதலைமைச்செயலகத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளித்ததாவது: தூத்துக்குடி திருநெல்வேலியில் பெய்த அதிகனமழை காரணமாக 118 இடங்களில் சாலைகள் முழுமையாக சேதமடைந்தன. இவற்றை தற்காலிகமாக சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 5 நாட்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. சாலைகளின் தற்காலிக சீரமைப்புக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சாலைகளை நிரந்தரமாக சீரமைக்க ரூ.475 கோடி தேவைப்படுகிறது. இதற்கான தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்துக்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலம் கட்டஏற்கெனவே மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழுத்தம்கொடுத்தார். அதன் பேரில் பணிகள் தொடங்கப்பட்டது. மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்க அரசு உறுதியாக உள்ளது.
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்டப்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் கீழே செல்வதால் அதற்குஇடையூறு ஏற்படாத வகையில் பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அத்துடன் உறுதித்தன்மை குறித்துஅதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பணிகளை 24மாதங்களுக்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், 18மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், தற்போது அண்ணா மேம்பாலம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலத்துக்கு கூடுதல் சிறப்பு செய்யும் வகையில், பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில் பணிகள்முடித்து, முதல்வர் திறந்து வைப்பார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிட கட்டுமானப் பணிகள் தற்போது 97 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கருணாநிதி நினைவிடத்துடன் சேர்த்து, அண்ணா நினைவிடத்தையும் முதல்வர் ஸ்டாலின் புதுப்பிக்க உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். அதன்பிறகு, முதல்வருடன் ஆலோசித்து தேதி பெற்று கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT