

சென்னை: யானைக்கவுனி மேம்பாலத்தில் ஒரு வழிக்கான பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் அர்பேசர் சுமீத் நிறுவன ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தீவிர தூய்மைப் பணியின்கீழ், அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட மருதம் காலனியில் உள்ள பொது இடத்தில் தேங்கியிருந்த குப்பை மற்றும் மரக்கழிவுகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. அதை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத்தவிர்க்கவும், வீடுகள்தோறும் சென்று சேகரிக்கப்படும் குப்பை சேகரித்தல் பணியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, குப்பைகளை முறையாக வகை பிரித்து வழங்கவும், டியூப்லைட், பாட்டில்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களை பொது இடங்களில் வீசுவதைத் தவிர்க்கவும், குப்பைகளை போடுவதற்கு குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில், தொடர்புடைய அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து ராயபுரம் மண்டலம், 60-வது வார்டு அன்னை சத்யா நகர் குடியிருப்புப் பகுதியை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கலந்துரையாடினார்.
பின்னர், யானை கவுனி மேம்பாலப் பணிகளை ரயில்வேதுறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பிப்ரவரி 2024-க்குள் ஒருவழிப்பாதைப் பணிகளை விரைந்து முடித்துபயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட 10 இருக்கைகளை, அச்சங்கத்தின் தலைவர் பி.மகேந்திர மேத்தா, துணைத் தலைவர் ஏ.வெங்கட் ராவ் ஆகியோர் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினர். அதன் உறுதித்தன்மை குறித்தும் ஆணையர் ஆய்வு செய்தார். மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் பி.ராமுலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.