

தூத்துக்குடி: “மகளிருக்கு கடன் வழங்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. எனவே, பெண்கள் கந்துவட்டி கும்பல், வட்டிக்காரர்களிடம் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்” என அமைச்சர் பெ.கீதா ஜீவன் வேண்டுகோள் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தவற்கான மதி எக்ஸ்பிரஸ் என்ற மினி வாகனங்கள் வழங்கும் விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,112 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.134 கோடி வங்கிக் கடன் இணைப்புகளையும், 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களுக்கான சாவிகளையும் வழங்கி பேசியது: “தமிழக முதல்வர் பெண்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.16 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
அதுபோல அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த புதுமைப் பெண் திட்டம் தொடங்கி முதல் ஆண்டில் 2.11 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளார்கள். இதில் 11,922 பேர் படிப்பை நிறுத்தியவர்கள். புதுமைப் பெண் திட்டம் மூலம் தற்போது அவர்கள் கல்லூரிகளில் படிக்கிறார்கள். இந்த ஆண்டு 2.30 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெற்றுள்ளார்கள்.
2023 - 2024-ம் ஆண்டுக்கு தமிழ்நாடு அரசு வங்கி கடன் இணைப்பு இலக்கீடாக மாநிலம் முழுவதற்கும் ரூ.30 ஆயிரம் கோடி நிர்ணயித்தது. அதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சுய உதவிக் குழு கடன் இலக்கீடாக 15616 குழுக்களுக்கு ரூ.881 கோடி நிர்ணயிக்கப்பட்டு ஆணை பெறப்பட்டது. இன்றைய தேதி வரை இந்த இலக்கை தாண்டி ரூ.900.73 கோடி 15,242 குழுக்களுக்கு வங்கியுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து அதனை மதிப்புப் கூட்டுப் பொருட்களாக மாற்றி சந்தைப் படுத்தி அதிக லாபங்களை ஈட்டி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மகளிருக்கு கடன் வழங்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. நீங்கள் வாங்கும் கடனை முறையாக திருப்பி செலுத்தினால் போதும். கந்து வட்டி கும்பல், வட்டிக்காரர்களிடம் நீங்கள் சிக்கி கஷ்டப்பட வேண்டாம். வங்கிகளை நாடி கடனுதவி பெற்று வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள்” என அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வீரபத்திரன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் எடிண்டா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரை ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.