Published : 07 Feb 2018 09:37 AM
Last Updated : 07 Feb 2018 09:37 AM

12 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் வைகோ: கலைஞர் கருவூலத்தை பார்வையிட்டு நெகிழ்ச்சி

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அங்குள்ள கலைஞர் கருவூலத்தை பார்வையிட்டு நெகிழ்ச்சி அடைந்தார்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

கலைஞர் கருவூலத்தை பார்த்தார்

கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் தலைவர் கள் சென்றுவிட்டனர். ஆனால், வைகோ மட்டும் ஸ்டாலினுடன் சென்று அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பார்வையிட்டார். திமுக தலைவர் கருணாநிதியின் அறைக்கும் சென்றார்.

பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

அண்ணா அறிவாலயம் என் பது திராவிட இயக்கத்தின் உயிரோவியம். ஒவ்வொரு செங்கல்லாக அறிவாலயம் கட்டப்பட்டபோது திமுக தலைவர் கருணாநிதியுடன் இருந்த நாட்களும், அதன் திறப்பு விழாவில் அவர் எனக்கு தங்க மோதிரம் அணிவித்த நிகழ்வும் இப்போது என் நினைவுக்கு வருகின்றன.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் சுமார் ஒரு மணி நேரம் கலைஞர் கருவூலத்தை பார்வையிட்டேன். திராவிட இயக் கம் கருக்கொண்ட நாள் முதல் இன்று வரை அதன் வரலாற்றுச் சுவடுகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அரிய புகைப்படங்கள், நூல்கள், இதழ்கள், பெரியார், அண்ணா, கருணாநிதி என தலைவர்களின் சாதனைகள், கருணா நிதி பெற்ற விருதுகள், பரிசுகள், போராட்ட வரலாறு என அனைத்தையும் கண்டு மகிழ்ந்தேன்.

கலைஞர் கருவூலம் தொடங்கப்பட்ட பிறகு கருணாநிதியுடன் பார்வையிட்டுள்ளேன். இப்போது மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அண்ணா அறிவாலயத்துக்கு வந்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

தேனியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். நியூட்ரினோ திட்டத்துக்கு திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிராக மக்களை திரட்டி வருகிறோம். விரைவில் நியூட்ரினோ எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தவுள்ளோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது கருணாநிதியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு வைகோ வந்தார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அப்போது கூட்டணி அமையவில்லை. அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் அண்ணா அறிவாலயத்துக்கு வைகோ வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x