Published : 08 Feb 2024 02:31 PM
Last Updated : 08 Feb 2024 02:31 PM

சிறுபான்மையினர் குறித்து அண்ணாமலை அவதூறாக பேசிய வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு 

சென்னை: சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை ரத்து செய்ய மறுத்து, அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x