

சென்னை: இளையராஜா இசை அமைத்துள்ள 1417-வது படம், ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின் நாயகனாக நடிக்கிறார். மனீஷா யாதவ்ஹீரோயினாக நடிக்கிறார். யுவலட்சுமி, சினாமிகா, ரோஹித் , மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல் தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ளனர். லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கியுள்ளார்.இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “ நடிகர் விஜய் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழ்த் திரையுலகம் சார்பில் அவரை வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15 சதவீதமாவது செய்யவேண்டும். மக்களிடம் இறங்கி வர வேண்டும். மேடையில் இருந்து கொண்டு புஸ்சி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ரூ.200 கோடி சம்பளத்தையும் வேண்டாம் எனக் கூறி மக்களுக்காக இறங்கி இருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நல்லது செய்வார் என நம்புவோம்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “இங்கே சரியான தலைவர்கள் அதிகம் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான்” என்றார்.
தயாரிப்பாளர்கள் கேயார், பி.எல்.தேனப்பன், கவிஞர் சினேகன், நடிகை கோமல் ஷர்மா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்