

சென்னை: ஸ்பெயின் பயணத்தின்போது3 பெரிய நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்கு பிறகு அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் திட்டமிடப்படும் என்று, சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த ஜனவரி 27-ம் தேதி ஸ்பெயின் புறப்பட்டு சென்றார். 8 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, அவர் நேற்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் முதல்வரை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நிதி துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ஸ்பெயினுக்கு சென்றதும் முதல் நிகழ்வாக, முன்னணி தொழில்நிறுவனங்கள் பங்கேற்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. ஸ்பெயினின் பல்வேறு தொழில் குழுமங்களை சேர்ந்த நிர்வாகிகள் வந்திருந்தனர். அந்நாட்டு பொருளாதாரம், வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், ‘இன்வெஸ்ட் ஸ்பெயின்’ அமைப்பினரை சந்தித்தேன்.
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு இருக்கும் உகந்த சூழல் பற்றி எடுத்துக்கூறி, இங்கு முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்.
அடுத்தடுத்த நாட்களில், ஸ்பெயினில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்தேன். அந்த வகையில், காற்றாலை மின் உற்பத்தி, நீர்மறுசுழற்சி நிறுவனமான ஆக்சியானா, உயர்தர கட்டுமான பொருட்கள், பீங்கான் பொருட்கள் உற்பத்திநிறுவனமான ரோக்கா, கன்டெய்னர் முனையங்கள், சரக்கு பூங்காக்களை அமைக்கும் ஹபக் லாய்டு நிறுவனம், உலக தரத்தில் சாலை கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் அபர்ட்டிஸ், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான கெஸ்டாம்ப், ரயில்வே உற்பத்திதொழிலில் உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படும் டால்கோ, பொறியியல் வடிவமைப்பு, பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீனகருவிகளை உற்பத்தி செய்யும் எடிபான், உயிரியல் ஆராய்ச்சி, மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினேன்.
அவர்கள் அனைவரும் தங்கள்தொழில் திட்டங்களை விளக்கியதுடன், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதையும் தெரிவித்தனர். இந்த முயற்சிகளால் ரூ.3,440 கோடிமுதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2,500 கோடி, எடிபான் நிறுவனம் ரூ.540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ.400கோடி முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளன. மற்ற நிறுவனங்களும் எதிர்காலத்தில் தங்கள் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகம், தமிழகஅரசு மீது உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது.
உற்பத்தி துறையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா கருதப்படும் இந்த வேளையில், அந்த துறையில் முந்தி செயல்படும் மாநிலமாக தமிழகம் முன்னேறி வருவதையும், பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் பல முதலீடுகள் தமிழகத்தில் கடந்த 2ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் ‘நியூயார்க் டைம்ஸ்’பத்திரிகை சுட்டிக்காட்டி பாராட்டிஉள்ளது. இதுபோன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கின்றன.
ஸ்பெயின் பயணம் மிகவும் பயன்உள்ளதாக அமைந்தது. தொடர்ந்து,இதுபோன்ற அடுத்தடுத்த பயணங்களும் திட்டமிடப்படும். மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதற்கு பிறகு என் பயணங்கள் இருக்கும்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். மக்களவை தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்றும் கூறியுள்ளார். மொத்தம் உள்ள 543 இடங்களையும் கைப்பற்றுவேன் என்றுசொன்னாலும் ஆச்சரியம் இல்லை.நடிகர் விஜய், கட்சி தொடங்கியுள்ளார். மக்களுக்கு தொண்டாற்றயார் வந்தாலும் மகிழ்ச்சி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.