Published : 08 Feb 2024 05:29 AM
Last Updated : 08 Feb 2024 05:29 AM

‘தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது’ - அமித் ஷா அழைப்பு; அதிமுக மறுப்பு

சென்னை: ‘தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. தற்போது பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் டெல்லியில் ஒரு நாளிதழுக்கு அளித்த நேர்காணலின்போது, தமிழகத்தில் மக்களவை தேர்தல் வியூகம் மற்றும் அதிமுக உடனான கூட்டணி முறிவு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தமிழகம் ஒரு முக்கியமான மாநிலம். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. பாஜக தேர்தல் அறிக்கையில், தமிழகம் சார்ந்த வாக்குறுதிகள் அதிகம் இடம்பெறும்” என்று தெரிவித்தார்.

அமித் ஷா இவ்வாறு கூறியது, அதிமுகவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது:

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அந்த செய்தியை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன்.

சென்னை விமான நிலையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: பாஜக - அதிமுக கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது மக்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகுதான் தெரியவரும் என்று ஏற்கெனவே கூறிவிட்டேன். அமித் ஷா அழைப்பு விட்டிருப்பதன் மூலம், அது உண்மை ஆகிவிட்டது. ஸ்டாலின் தலைமையில் பலமான அணி இருப்பதால், அதிமுக பலமிழந்துவிட்டது. அவர்களும் என்னென்னவோ செய்து பார்க்கின்றனர், ஒன்றும் முடியவில்லை.

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தேர்தல் கூட்டணி கதவு இன்னும் திறந்தே இருக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயமாக தனிப்பெரும்பான்மை பெறும். பாஜக உடனான கூட்டணியில் நான் தொடர்கிறேன்.

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: எம்ஜிஆர், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகியோரை சிறுமைப்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். தொண்டர்கள் மனநிலையின் பிரதிபலிப்பாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x