Published : 08 Feb 2024 06:20 AM
Last Updated : 08 Feb 2024 06:20 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் இல.சுப்பிரமணியன், இயக்குநர் ந.அருள், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் உள்ளவணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள்அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முதலில் தமிழில் இடம்பெற வேண்டும், தொடர்ந்து ஆங்கிலத்திலும், அவரவர் தாய்மொழிகளிலும் 5:3:2 என்ற வீதத்தில் அமையப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்குமாறு வணிகர் சங்கங்கள் வலியுறுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார். வரும்ஏப்ரல் மாதத்துக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள் வாயிலாக அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களுக்கு பெயர்ப் பலகைகளில் முதன்மையாக தமிழிலும் பிறகு ஆங்கிலத்திலும் பெயர் இடம்பெற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு செயல்படுத்தி வருவதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT