

சென்னை: அஸ்திவார பணியால் ஏற்படும் அதிக சத்தத்தால் சுற்றுப்புற மக்கள்பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது: சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக10 மாடி மருத்துவமனையை கட்டிவருகிறது.
இந்த கட்டுமான பணியில், ஆழ்குழாய் மூலமாக அஸ்திவாரம் (பைல் ஃபவுண்டேஷன்) அமைப்பதால் அதிக ஒலி எழுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்ததைவிட அதிக ஒலி மாசு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒலியால் தூக்கம் கெடுகிறது: அந்த பகுதியில் மூத்த குடிமக்கள்அதிகம் வசிக்கின்றனர். பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகளும் அதிகமாக உள்ளன. மருத்துவமனை கட்டுமானத்தால் எழும் ஒலி மாசு காரணமாக, குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் தூக்கத்தை இழக்க நேரிடுகிறது.
தொடர்ச்சியாக நள்ளிரவையும் தாண்டி அதிகாலை நேரத்திலும் பணிகள் நடக்கின்றன. கட்டுமான பணிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாநகராட்சி, சிஎம்டிஏ, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை அஸ்திவார பணி மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். ஒலி மாசு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிஎம்டிஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒய்.புவனேஷ்குமார், ‘‘மருத்துவமனையின் 10 மாடி கட்டுமானத்துக்கு சிஎம்டிஏ தரப்பில் திட்ட அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை’’ என்றார்.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எம்ஜிஎம் கட்டி வரும் 10 மாடி மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தனர். இதுதொடர்பாக எம்ஜிஎம் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்.12-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.