

மதுரை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் என கனிமொழி எம்பி கூறினார்.
வரும் மக்களவை தேர்தலை யொட்டி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நேற்று மதுரையில் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்டது. மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்
வணிகர் சங்கங்கள், விவசாயிகள், பொறியாளர் சங்கங்கள், தொழில் முனைவோர், அரிசி ஆலை உரிமையாளர்கள், மாணவர் சங்கங்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, எம்.மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.
கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு தரப்பினரும் மனுக் களை வழங்கியுள்ளனர். முதல்வர் ஒப்புதலைப் பெற்று தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். ஜிஎஸ்டி-யில் உள்ள பிரச்சினை களால் சிறு குறு தொழிலதிபர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதை மனுவாக வழங்கியுள்ளனர். ரயில்வேயில் வழக்கமாக தென் மாநிலங்களுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும், 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்தும் மனுக்கள் வந்துள்ளன.
தென் மாவட்டங்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படுவதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகக் கூறுவது தவறான புரிதல். முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றபோது திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைக்கக் கூடிய அளவுக்கு ஆட்சி நடக்கும் என கூறியபடி செயலாற்றுகிறார். சட்டப்பேரவை தேர்தலின் போது இடம் பெற்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
ரூ.15 லட்சம் யாருக்கும் வந்து சேரவில்லை. தென் மாநிலங்களுக்கான ரயில்வே நிதி குறைந்து கொண்டேதான் வருகிறது. கல்விக்கான நிதியும் குறைந்துவிட்டது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என தெரியவில்லை. மழை நிவாரணம் இன்று வரை ஒரு ரூபாய்கூட வரவில்லை. தமிழகத்துக்கு எதையும் செய்யக்கூடாது என்ற ஒரு நிலையில்தான் மத்திய அரசு இருக்கிறது. அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் நிறை வேற்றுவார். இவ்வாறு கனிமொழி கூறினார்.