பிரேமலதாவின் கூட்டணி ‘நிபந்தனை’ முதல் நேரு மீதான மோடி விமர்சனம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.7, 2024

பிரேமலதாவின் கூட்டணி ‘நிபந்தனை’ முதல் நேரு மீதான மோடி விமர்சனம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.7, 2024
Updated on
2 min read

உதகையில் கட்டிடம் இடிந்து விபத்து: 6 பெண்கள் உயிரிழப்பு: உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின்போது, மண் சரிந்ததில் புதைந்து 6 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின்போது மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

“பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை” - அதிமுக உறுதி: “பாஜகவுடன் எப்போது கூட்டணி இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடாகும். பாஜகவைப் பொறுத்தவரை எங்களது கூட்டணிக் கதவு மூடப்பட்டுவிட்டது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே “மோடி தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அமித் ஷா தெளிவாகக் கூறியுள்ளார். மற்றபடி, எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை” என்று அமித் ஷாவின் கூட்டணி பேச்சுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

“14 சீட், 1 மாநிலங்களவை இடம் தருவோர் உடன் கூட்டணி” - பிரேமலதா: “மக்களவைத் தேர்தலில் தனித்து களம் போட்டியிடுவது அல்லது 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விரும்புகின்றனர்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதனிடையே, மறைந்த தேமுமுக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் பயணம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: ஸ்பெயினில் இருந்து புதன்கிழமை காலை தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின், “ஸ்பெயின் நாட்டுக்கு தான் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்தது. ரூ.3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று தெரிவித்தார்.

கீழடி 1, 2-ம் கட்ட அகழாய்வு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு: கீழடியில் நடைபெற்ற முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.10 வரை நீட்டிப்பு: நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.10-ம் தேதி வரை ஒருநாள் நீடிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்.9-ம் தேதி நிறைவடைவாதாக இருந்த நிலையில், அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

“இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு: “பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்” என பிரதமர் மோடி பேசினார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பிரதமர் மோடி இந்தக் கருத்தை முன்வைத்தார்.

முன்னதாக, காங்கிரஸ் குறித்த மம்தா பானர்ஜியின் 40 சீட் அறிக்கையை மேற்கோள் காட்டி, “நீங்கள் 2024 மக்களவைத் தேர்தலில் 40 இடங்களை பெறுவதற்கு நான் இறைவனை வேண்டுகிறேன்” என காங்கிரஸ் தலைவர் கார்கேவை கேலி செய்தார்.

டெல்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்: கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி திவ்யா மல்ஹோத்ரா, அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கேஜ்ரிவால் வழக்கு தொடர முடியும் என்றும், இல்லாவிட்டால் தனக்குப் பதிலாக தனது வழக்கறிஞர் ஆஜராவார் என தெரிவிக்க முடியும் என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு: 26 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், புதன்கிழமை நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in