Published : 07 Feb 2024 10:18 AM
Last Updated : 07 Feb 2024 10:18 AM

மதுரையில் குடிநீருக்கு அலைமோதும் மக்கள் - செயற்கை பற்றாக்குறையால் லாரிகளில் விநியோகம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: கோடைகாலம் தொடங்கிய நிலையில், மதுரை குடியிருப்பு களில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வது அதிகரித்துள்ளது. செயற்கை குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் குடிநீருக்கு அலைமோதும் நிலை உள்ளது.

மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. வாரம் ஒரு முறையும், சில வார்டுகளில் சீராகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், சமீப காலமாக வாரம் ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ததால் மக்கள் வீட்டு உபயோகத்துக்குக் கூட குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர். ஆனால், அதன் பிறகு சீராக மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

வைகை அணையிலும் ஓரளவு தண்ணீர் இருந்ததால் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்போது வைகை அணையில் தண்ணீர் இருந்தும் ஏராளமான வார்டுகளில் வாரத்துக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. குடிநீர் விநியோகம் செய்வதற்கு பெரிய குழாய், போதுமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இல்லாததால் இந்த விநியோக குறைபாடு பல வார்டுகளில் இருந்தது. ஆனால், நிலத்தடி நீர்மட்டம் போதுமான அளவு இருந்ததால் குடிநீர் பற்றாக்குறை வெளிச்சத்துக்கு வரவில்லை.

ஆனால், தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பல வார்டுகளில் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் சாலைப்பணி, பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் நடப்பதால் குடிநீர் குழாய் உடைந்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க பல வாரம் ஆகிவிடுகிறது. மாநகராட்சி ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து வார்டுகளிலும் 2 நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x