Published : 07 Feb 2024 08:16 AM
Last Updated : 07 Feb 2024 08:16 AM
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜக – திமுக கூட்டணி ஆட்சி இருந்தபோது 2003-ம் ஆண்டு மின்சார சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக மீண்டும் திமுக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் லிமிடெட், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் லிமிடெட், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் லிமிடெட் என மூன்று நிறுவனங்களாகப் பிரித்தது.
இதன்படி, சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில், தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த மின்துறை, கடந்த 1957-ல் பொதுத்துறை நிறுவன அந்தஸ்துடன், வாரியமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2024-ம் ஆண்டு வாரியம் பிரிக்கப்பட்டு, தனியாருக்கு தாரை வார்க்க திமுக அரசு வழிவகுத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. மின்வாரியம் தனியார் மயமானால், இலவச மின்சாரம், சலுகைக் கட்டண மின்சாரத் திட்டங்களை நிறுத்தும் அபாயம் உள்ளது.
மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியால் மீண்டும் மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் தலையில்தான் விடியும்.தற்போது மின்வாரியத்தில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT