Published : 07 Feb 2024 06:12 AM
Last Updated : 07 Feb 2024 06:12 AM

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்

திருமயம் தேக்காட்டூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளை நேற்று பயனாளிகளிடம் ஒப்படைத்த அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடியில் கட்டப்பட்ட 58 வீடுகள் கொண்ட குடியிருப்பு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

புதிய குடியிருப்பை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மஸ்தான் கூறியது: தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு 2 கட்டங்களாக வீடுகள்கட்ட ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்த இடங்களில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, 106 முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இலங்கையில் இருந்து முதலில் தமிழகம் வந்த200 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக சட்டக் குழுவும் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு விரைவில் குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் மாணவர்கள், உயர் கல்வி பயில தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் மட்டும் சட்ட சிக்கல் உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும்போது, இலங்கைத் தமிழர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x