Published : 07 Feb 2024 06:20 AM
Last Updated : 07 Feb 2024 06:20 AM

கனிம நிறுவன ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்: ரூ.14,000 முதல் ரூ.50,000 வரை இழப்பால் வேதனை

சிவகங்கை: தமிழ்நாடு கனிம நிறுவன (டாமின்)ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதால், ஒவ்வொருவருக்கும் மாத ஊதியத்தில் ரூ.14,000 முதல் ரூ.50,000 வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.

தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில், மாநிலம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட கிரானைட், கிராபைட், சுண்ணாம்புக் கல், சிலிகா மணல், வெள்ளை தீ களிமண் குவாரிகள் இயங்கி வருகின்றன. மேலும், 10-க்கும் மேற்பட்ட குவாரிகள் விரைவில் செயல்பட உள்ளன. இவற்றில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், 2020 நவம்பரில் இருந்து 2021 மார்ச் வரை ஊழியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமேவழங்கப்பட்டது. அதேபோல, 2017அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ந்து 7 சதவீத அகவிலைப்படி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அரசு ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

மாத ஊதியத்தில்.. ஆறு ஆண்டுகளுக்கு மேலாகஅகவிலைப்படி உயர்வு இல்லாததால், ஒவ்வொரு ஊழியருக்கும் மாத ஊதியத்தில் ரூ.14,000 முதல்ரூ.50,000 வரை இழப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து கனிம நிறுவன ஊழியர்கள் கூறியதாவது: குவாரிகள் அனைத்தும் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன. எனவே, ஏற்கெனவே 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பாதி ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். அதேபோல, அரசு ஊழியர்களை போல எங்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 6 ஆண்டுகளுக்கு மேலாகஅகவிலைப்படி உயர்வு இல்லை.

இதனால் சிலர் விருப்ப ஓய்வுபெற்று வருகின்றனர். இதையடுத்து, எர்ணாவூரில் கனிம நிறுவனத்துக்கு சொந்தமான 8.5 ஏக்கர் நிலத்தை விற்க 3 ஆண்டுகளுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டது. அதை உடனடியாக விற்று, ஊழியர்களின் ஊதியம், நிர்வாகச் செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து ஊழியர்கள் சார்பில், தமிழ்நாடு கனிம நிறுவனத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு கனிம நிறுவன ஊழியர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x