Published : 07 Feb 2024 04:04 AM
Last Updated : 07 Feb 2024 04:04 AM
சேலம்: மக்களவைத் தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடப் போவதாகக் கூறும் ஓபிஎஸ், யாரை ஏமாற்ற நினைக்கிறார் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாஜக எஸ்டி பிரிவு மாநில செயலாளர் பாபண்ணா, தளி தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர், அவரவர் சார்ந்திருந்த கட்சிகளில் இருந்து விலகி, அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் நேற்று சேலம் வந்தனர். அவர்கள் சேலம் நெடுஞ் சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நேரில் சந்தித்து, தங்களை அதிமுக-வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ., ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுக-வினர் பலர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அரசியலில் அனுபவம் கொண்டவர். நிச்சயமாக அவர் கூறியது போல அவர் மெகா கூட்டணி அமைப்பார். தேர்தலில் வெற்றியும் பெறுவார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து, ஊடகங்களுக்கு தேவையான தகவலை மட்டும் கூறுவோம். மற்றவற்றை நடவடிக்கை வாயிலாக வெளிப்படுத்துவோம்.
ஓபிஎஸ், 2 முறை முதல்வராக இருந்தவர். ஜெயலலிதாவின் கருணையால் இந்த இடத்துக்கு வந்தவர். அப்படியிருந்தும் கூட, சொந்த புத்தியில் கருத்து சொல்கிறார். உச்ச நீதிமன்றம் தொடங்கி, அனைத்து நீதிமன்றங்களும் பழனிசாமி தான் அதிமுக பொதுச் செயலாளர், அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டன. இதன் பின்னரும், தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறும் ஓபிஎஸ், யாரை ஏமாற்ற நினைக்கிறார், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT